புதுடெல்லி: இந்தியா நோக்கி சென்றுகொண்டிருக்கும் கிட்டத்தட்ட 36 கப்பல்கள் தற்போது ஹோர்முஸ் நீரிணை மற்றும் செங்கடலின் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் சிக்கியுள்ளன. அவற்றில் 25 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ளன.
தற்போதைய வேளாண் பருவத்திற்கு மிகவும் தேவையான உரங்களை ஏற்றிவரும் எட்டுக் கப்பல்கள், எரிபொருள்களை ஏற்றிவரும் மூன்று கப்பல்கள் உட்பட 13 கப்பல்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இந்தியக் கொடி தாங்கிய 17 கப்பல்களுடன் வெளிநாட்டுக் கொடி தாங்கிய சில கப்பல்களும் இந்தியா நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. அவற்றின் ஊழியர் குழுவில் இந்திய மாலுமிகளும் இடம்பெற்றுள்ளனர்.
மத்திய கிழக்கில் போர் மூண்டதிலிருந்து இந்தியாவின் நலன் சார்ந்த 67 கப்பல்கள் மோதல் நிறைந்த அப்பகுதியைக் கடந்துள்ளன. மேலும், அங்குச் சிக்கியிருந்த 4,052 இந்தியக் கடலோடிகளும் தாயகம் திரும்பிவிட்டனர்.
இந்நிலையில், உயரதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால், “இந்தியக் கடலோடிகள் முக்கியப் பணியாளர்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு அவர்களுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் உறுதியாக நிற்கிறது. நமது கடலோடிகளின் பாதுகாப்பிற்கே மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறோம்,” என்றார்.
கடல்சார் கட்டுப்பாட்டு அமைப்பான ‘டிஜிஎம்ஏ’ அவசர உதவி மையத்தின் மூலம் 16,448 தொலைபேசி அழைப்புகளும் 40,594 மின்னஞ்சல்களும் கையாளப்பட்டுள்ளன. அத்துடன், உயிரிழந்த கடலோடிகளின் குடும்பத்தினருக்குத் தலா 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
பாரசீக வளைகுடாவில் இந்தியக் கப்பல்கள் தொடர்பில் நான்கு சம்பவங்களும் வெளிநாட்டுக் கொடி தாங்கிய கப்பல்கள் தொடர்பில் 33 சம்பவங்களும் நடந்துள்ளன. கருங்கடலில் மேலும் 22 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை, செங்கடல், ஏடன் வளைகுடா ஆகியவை அபாயகரமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விழிப்புடன் இருக்கும்படி கப்பல்களுக்கும் கப்பல் நிறுவனங்களுக்கும் இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


