25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு; திருத்தணி ஏரி நீரோடையில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் இடிப்பு

1 mins read
7041466a-81ca-4f7f-86d4-326207e46495
திருத்தணி ஏரி நீரோடையில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளின் முன்பகுதி பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது. - படம்: தினகரன்

திருத்தணி: திருத்தணியில் உள்ள நீரோடையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் மற்றும் கட்டுமானங்களை அகற்ற வருவாய்த் துறையினர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

திருத்தணியில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரிக்கு மழைநீர் செல்லும் 40 அடி அகலம் கொண்ட நீரோடையை மறைத்து, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனைகள் போட்டு ‘சாய்பாபா நகர்’ என்ற பெயரில் விற்கப்பட்டன.

சுமார் 25 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு அடுக்குமாடி வீடுகள் கட்டி வசித்து வந்தன.

ஒரு தனிமனிதர் தொடுத்த பொதுநல வழக்கில், ஏரிக்கு மழைநீர் செல்லும் நீரோட்டப் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், நீர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து, கோட்டாட்சியர் கனிமொழி, வட்டாட்சியர் குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் சாய்பாபா நகரில் 2வது தெருவில் வசிப்பவர்களுக்கு அறிவிப்புக் கடிதம் வழங்கிய பின், சனிக்கிழமை (டிசம்பர் 7) பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தொடங்கினர்.

வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், டிஎஸ்பி கந்தன் மற்றும் ஆய்வாளர் மதியரசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கோயில் முன்பகுதியும் நீரோடைக்கு இருபுறமும் கட்டப்பட்ட வீடுகளின் முன்பகுதியும் இடிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்