லக்னோ: காசி விஸ்வநாதர் கோவில் வழித்தடத் திட்டம் உத்தரப் பிரதேசத்தின் பொருளியல் வளர்ச்சிக்கு பேரளவில் கைகொடுப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அத்திட்டத்தின் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் ரூ.355 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 2021 டிசம்பரில் காசி விஸ்வநாதர் வழித்தடத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 25 கோடி பேர் வந்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், பல நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள், சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து, மாநில அரசுக்கான வருவாய் உயர்ந்துள்ளது.
உள்ளூர் வணிகர்கள், சிறிய வியாபாரிகள், படகோட்டிகள், பூசாரிகள், சில்லறை வியாபாரிகள், உணவகங்கள் எனப் பல்வேறு வணிகங்கள் சிறப்பாக நடைபெற சுற்றுலாப் பயணிகளின் தொடர் வருகை கைகொடுக்கிறது.
மேலும், ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடிகிறது என்கிறார் காசி விஸ்வநாதர் கோவிலின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வபூஷண் மிஸ்ரா.
தற்போது உத்தரப் பிரதேச மாநில பொருளியலுக்கு ரூ.1.25 லட்சம் கோடி பங்களிப்பை அளித்துள்ளது காசி விஸ்வநாதர் வழித்தடம்.
தொடர்புடைய செய்திகள்
கோவிலுக்கு வரும் மொத்த பக்தர்களில் ஏறக்குறைய 70% பேர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 15 விழுக்காட்டினர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
“பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் சராசரியாக ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரத்துக்கு மேல் செலவிடுகிறார்கள். அந்த வகையில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஏறக்குறைய ரூ.1.25 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
“இது மாநில அரசின் பொருளியல் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது,” என்கிறார் வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சமசுகிருத பல்கலைக்கழகத்தின் பொருளியல் நிபுணர் பேராசிரியர் ராஜ்நாத்.