புதுடெல்லி: டெல்லியில் புதிதாகப் பதவிக்கு வந்துள்ள பாஜக அரசாங்கம் தனது முதல் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
முதல்வரும் நிதி அமைச்சருமான ரேகா குப்தா அந்த அறிக்கையை செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார்.
தகுதி உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்க 5,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் அறிவித்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றம் வகையில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2,500 ரூபாயை வழங்க பாஜக அரசாங்கம் முன்வந்து உள்ளது.
மேலும், பெண்களின் பாதுகாப்புக்காக டெல்லி முழுவதும் 50,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் ரேகா குப்தா அறிவித்தார்.
2025-26 நிதியாண்டுக்கான டெல்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி எனவும் இது கடந்த ஆண்டின் பட்ஜெட்டைவிட 31.5% அதிகம் என்றும் அவர் கூறினார்.
அவர் தமது உரையில் குறிப்பிடும்போது, “முந்தைய அரசு டெல்லியின் வளர்ச்சியில் தோல்வியடைந்துள்ளது. யமுனை அசுத்தமாக இருந்தது. சாலை சேதமடைந்து இருந்தது. காற்று மாசுபாடு அதிகமாக இருந்தது, டெல்லி நிர்வாகம் நஷ்டத்தில் இருந்தது. இத்தகைய அரசை நடத்துவது சவாலானதுதான்.
“ஆனால் பாஜக அரசு, உள்கட்டமைப்பு மேம்பாடு, நீர், மின்சாரம் மற்றும் சாலை மேம்பாடு உள்ளிட்ட 10 முக்கிய துறைகளை மையமாகக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த ஆண்டு சுமார் ரூ.15,000 கோடியாக இருந்த மூலதனச் செலவு இந்த ஆண்டு ரூ.28,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
டெல்லியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.