தெலுங்கானாவில் 25,000 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு

தெலுங்கானாவில் 25,000 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு

படம்: இந்திய ஊடகம்

02 Nov 2025 - 7:36 pm

1 mins read

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்திலுள்ள கோவில்களுக்குச் சொந்தமான 91,827 ஏக்கர் நிலங்களில் கிட்டத்தட்ட 25,000 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, கோவில் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதையும் அவற்றை முறைகேடாகப் பயன்படுத்துவதையும் தடுப்பதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முடிவுசெய்துள்ளார்.

அதற்கேதுவாக சட்டத் திருத்தம் செய்ய அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

கோவில்களுக்கும் அறநிறுவனங்களுக்கும் சொந்தமான நிலங்களையும் கட்டடங்களையும் ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து மீட்க அரசு இலக்கு கொண்டுள்ளது.

அதன்படி, மாநில அறநிலையத் துறையானது காவல்துறையுடனும் ஹைதராபாத் பேரிடர் மேலாண்மை, சொத்துப் பாதுகாப்பு அமைப்புடனும் இணைந்து ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஆக்கிரமிப்பாளர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சொத்துகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதிசெய்யவும் முதல்வர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கோவில் நிலங்களைப் பாதுகாப்பதற்கென்றே மாநில அளவில் ஒரு பணிக்குழுவை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. சட்டவிரோத ஆக்கிரமிப்புகளைக் கண்டறியவும், புகாரளிக்கவும், அவற்றுக்கு எதிராகச் செயல்படவும் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும்.

அக்குழுக்கள் திறம்படச் செயல்படுவதற்கு ஏதுவாக, சொத்து மேலாண்மை, சட்ட வல்லுநர்கள் அவற்றில் இடம்பெற்றிருப்பர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, எதிர்காலத்தில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க அவற்றுக்குப் புவிசார் குறியிடும் முறை தொடங்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்குச் சொந்தமான கிட்டத்தட்ட 50 விழுக்காட்டு நிலங்கள் ஏற்கெனவே மின்னிலக்க முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன.

குறிப்புச் சொற்கள்