புதுடெல்லி: மியன்மாரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த இணைய மோசடி நிலையங்களில் இருந்து மேலும் 266 இந்தியர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்தியா உள்ளிட்ட மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் விளையாட்டு, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் மக்களை ஏமாற்றுவதை மோசடிக்காரர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
மோசடியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மோசடி நிலையங்கள் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற மோசடி நிலையங்களில் பணிபுரிய அதிக சம்பளம் வழங்குவதாகக் கூறி ஏமாற்றி, பணியாளர்களை வேலைக்கு எடுத்து அவர்களைக் கொத்தடிமைகளாக மோசடிக்காரர்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இதுபோன்ற மோசடி நிலையங்களை ஒடுக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. அந்நாட்டின் கோரிக்கையை ஏற்று மியன்மார் அண்மையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன் விளைவாக இதுவரை 549க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மோசடி நிலையங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “மோசடி நிலையங்களிலிருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மியன்மாருடனும் தாய்லாந்துடனும் வெளியுறவு அமைச்சு இணைந்து செயல்பட்டு வருகிறது. விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலமாக மேலும் 266 இந்தியர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது,” எனக் கூறியுள்ளார்.
“இதேபோன்று, 283 இந்தியர்கள் அடங்கிய முதல் குழு மார்ச் 10ஆம் தேதி இந்தியா திரும்பியது. இதில், 266 ஆண்களும் 17 பெண்களும் அடங்குவர். இதுவரை மொத்தமாக 549 இந்தியர்கள் மியன்மாரின் மோசடி நிலையங்களிலிருந்து மீட்டகப்பட்டுள்ளனர்,” என அவர் தெரிவித்துள்ளார்.

