மும்பை: வங்கி முறைகேடு தொடர்பான வழக்கில், பிரபல இந்தியத் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.
ரூ.2,796 கோடி தொகையைக் கடனாகப் பெற்றிருந்தார் அனில் அம்பானி (66 வயது). இவருக்குச் சொந்தமான ‘ராகாஸ்’ குழுமத்துக்கு அளிக்கப்பட்ட அந்தத் தொகையை, சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்தார் என்பது அனில் அம்பானி மீதான குற்றச்சாட்டு. இதையடுத்து, விசாரணையைத் தொடங்கியது சிபிஐ.
இதனிடையே, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை மோசடி நிறுவனமாக கடந்த ஜூன் 13ஆம் தேதி எஸ்பிஐ வங்கி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.
மேலும், எழுத்துப்பூர்வமாகவும் அந்த வங்கி அளித்த புகாரின் பேரில், சிபிஐ ஆறு இடங்களில் அண்மையில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கிடையே, வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி அமைப்புகளிடம் இருந்து அனில் அம்பானி மொத்தம் ரூ.17,000 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ இரண்டு வெவ்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
மேலும், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கும் அவர் மீது பாய்ந்துள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பாக, கடந்த மாதம் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனில் அம்பானிக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியப் பணக்காரர்களில் முதல் இடத்திலும், ஆசிய-உலகப் பணக்காரர்கள் வரிசைகளில் இடம்பெற்று இருப்பவருமான முகேஷ் அம்பானியின் சகோதரர்தான் அனில் அம்பானி.
அடுத்தடுத்த வழக்குகள், சிபிஐ, அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கைகளால் அனில் அம்பானிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.