தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை விமான நிலையத்தில் 27 விமானச் சேவைகள் பாதிப்பு

2 mins read
65e2ba61-ee1b-43db-8157-da5965692bf7
சென்னை விமான நிலையம். - படம்: இந்திய விமான நிறுவன ஆணையம் (எக்ஸ்)

சென்னை: சென்னையில் தொடர்ந்து மழை கொட்டித் தீர்ப்பதால் 27 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. 

சென்னை மாநகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால், ஹைதராபாத்திலிருந்து 140 பயணிகளுடன் சனிக்கிழமை இரவு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து 164 பயணிகளுடன் ஏா் இந்தியா விமானம், மங்களூரிலிருந்து 74 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பிராங்ஃபர்ட்டிலிருந்து 268 பயணிகளுடன் லூஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் ஆகிய நான்கு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திருப்பிவிடப்பட்டன.

மழை நின்று வானிலை சீரடைந்த பின்னா் அந்த 4 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சென்னைக்கு வந்தன.

இதேபோல, கோலாலம்பூர், ஹாங்காங், திருவனந்தபுரம், இந்தூா், டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த எட்டு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபடி பறந்து, வானிலை சீரடைந்த பின்னா் சுமார் அரை மணிநேரம் தாமதமாகத் தரையிறக்கப்பட்டன.

மேலும், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூர், பிராங்க்ஃபர்ட், ஹாங்காங், இலங்கை, துபாய், குவைத், மஸ்கட், சிங்கப்பூர், டெல்லி, புனே உள்ளிட்ட 15 விமானங்கள் 1 முதல் 2 மணிநேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 12 வருகை விமானங்கள், 15 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 27 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளாயினர்.

குறிப்புச் சொற்கள்