லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 59 வயது நபர் ஒருவர், 27 ஆண்டுகள் தொடர்ந்து தேர்வெழுதி அரசு ஆசிரியராகத் தேர்வாகியுள்ளார்.
பாக்பத் மாவட்டத்தின் பரவுத் பகுதியைச் சேர்ந்த விஜய்குமார் சர்மா, தமது மகளுடன் சேர்ந்து தேர்வெழுதி தனது பல்லாண்டு கால கனவை நனவாக்கியுள்ளார்.
மறைந்த விஜய்குமார் சர்மாவின் தந்தை லட்சுமண் சிங், ஓர் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். தந்தையைப் போலவே தானும் அரசு ஆசிரியராக வேண்டும் என்ற கனவோடு, 1999ஆம் ஆண்டு முதல் தேர்வுகளை எழுதத் தொடங்கினார்.
தனியார் பள்ளியில் 26 ஆண்டுகள் சமஸ்கிருதம், இந்தி ஆசிரியராகப் பணியாற்றியபடியே, அவர் ஓய்வு நேரத்தில் தீவிரமாகப் படித்து வந்தார். சில மாதிரி வினாத்தாள்களுக்குச் சரியான நேரத்தில் விடையளிக்கும் வரை உணவைக் கூடத் தவிர்த்துக் கடுமையாக உழைத்துள்ளார்.
கடந்த காலங்களில் பத்து முறை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், நேர்காணல் சுற்றில் இவருக்கு வாய்ப்பு கைநழுவிப் போனது.
தற்போது நடைபெற்ற தேர்வில் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டது விஜய்குமார் சர்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.
நீண்ட போராட்டத்தின் பலனாக, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று சமஸ்கிருத ஆசிரியராக அவர் தேர்வாகியுள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற விழாவில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடமிருந்து விஜய்குமார் சர்மா பணிநியமன ஆணையைப் பெற்றுக்கொண்டார்.
அவருடன் சேர்ந்து தேர்வெழுதிய அவருடைய 28 வயது மகள் மம்தாவும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மகள் மம்தாவின் பெயர் தற்போது காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிகளின்படி விஜய்குமார் சர்மாவுக்குப் பணி ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்களே உள்ளன.
இருப்பினும், இத்தனை ஆண்டு உழைப்புக்குக் கிடைத்த வெற்றி தன் குடும்பத்திற்கும் தந்தைக்கும் கிடைத்த பெருமை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
