எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 274 மலையேறிகள் சாதனை

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 274 மலையேறிகள் சாதனை

2 mins read
6700aa1e-dc42-4f94-9f8e-03ebce873ffe
ஆக அதிக எண்ணிக்கையிலான மலையேறிகள் ஒரே நாளில் எவரெஸ்ட் மலை உச்சியைத் தொட்டு புதிய சாதனையையும் படைத்தனர். - படம்: ஆதித்ய குப்தா

காத்மாண்டு: நேப்பாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 274 மலையேறிகள் சாதனை படைத்துள்ளனர். அவர்களில் மூவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

ஆக அதிக எண்ணிக்கையிலான மலையேறிகள் ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டி புதிய சாதனையையும் படைத்துள்ளனர்.

அந்த 274 மலையேறிகளும் 8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தைப் புதன்கிழமை (மே 20) சென்றடைந்தனர். அவர்களில் 150 பேர் நேப்பாள ‌ஷெர்பா வழிகாட்டிகள்.

அவர்கள் அனைவரும் எவரெஸ்ட் உச்சியை ஒரே நாளில் சென்றடைந்ததாக நேப்பாளத்தின் பயணச் செயல்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாகி ரி‌ஷி ராம் பந்தாரி அறிவித்தார்.

உலகச் சாதனை படைத்த மலையேறிகள் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த துளசி ரெட்டி பால்புனூரி, சந்தீப் ஆரே, அஜய் பால் சிங் தாலிவால் ஆகியோர் இருந்தனர்.

இந்தக் கோடைக்காலத்தில் எவரெஸ்ட் மலையேறிகளிடையே புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என்ற திரு ரிஷி ராம், கோடைக்காலத்தில் மலையேற 502 பேர் அனுமதி கேட்டிருந்ததைப் பகிர்ந்துகொண்டார்.

இதற்குமுன் 2019ஆம் ஆண்டு மே மாதம், 223 மலையேறிகள் நேப்பாளத்திலிருந்து ஒரே நாளில் எவரெஸ்ட் உச்சியைத் தொட்டனர்.

இந்தியாவைச் சேர்ந்த லட்சுமிகாந்த மண்டலும் வியாழக்கிழமை (மே 21) எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்தார். அவருடன் எட்டுப் பேர் மலையேறினர். அவர்களில் ஆறு பேர் நேப்பாள ‌ஷெர்பா வழிகாட்டிகள் என்று பயணத்துக்கு ஏற்பாடு செய்த பயனியர் அட்வெஞ்சர் நிறுவனம் சொன்னது.

புதிய சாதனைகள் படைத்தோரில் நேப்பாளத்தைச் சேர்ந்த காமி ரீட்டா ‌ஷெர்பாவும் ஒருவர். அவர் 32வது முறையாக எவரெஸ்ட் உச்சியைத் தொட்டு சாதனை படைத்தார்.

குறிப்புச் சொற்கள்