சிம்லா: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ நெகிழிக் கழிவுகள், 41 உலோக ஆணிகளை அகற்றி அதன் உயிரைக் காப்பாற்றி உள்ளனர் இமாச்சலப் பிரதேச மருத்துவர்கள்.
அங்குள்ள ஊனா மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது.
கால்ருஹி கிராமத்தில் இந்தப் பசு, நான்கைந்து நாள்கள் தீவனத்தைத் தொடாமல் தண்ணீரும் அருந்தாமல் இருந்ததைக் கண்டு, அங்கு வசிக்கும் விபின் குமார் கவலையடைந்தார். இதையடுத்து, பசு மாட்டை கால்நடை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பசுவின் வயிற்றுக்குள் இயற்கைக்கு மாறான பொருள்கள் இருக்கக்கூடும் என முதற்கட்டப் பரிசோதனையின் மூலம் முடிவுக்கு வந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
அறுவை சிகிச்சையின்போது பசுவின் வயிற்றில் இருந்து நெகிழிப் பொருள்கள், துணிகள், கயிறுகள், 41 ஆணிகள், பலவிதமான உலோகத் துண்டுகள் எனப் பலவிதமான பொருள்கள் அடுத்தடுத்து அகற்றப்பட்டன.
தற்போது அந்தப் பசு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக அதற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நிஷாந்த் ரனௌத் தெரிவித்தார்.