புதுடெல்லி: இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறையிலும் ரயில் பயணிகளின் பயண அனுபவத்திலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், 2,843 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சிறப்புச் சரக்கு ரயில் பாதைத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மேற்கு சிறப்புச் சரக்குப் பாதையின் இறுதிப் பகுதிகளைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, நாட்டின் இரண்டு முக்கியமான சரக்குப் பாதைகளும் முழுமை பெற்றுள்ளன.
மேற்கு சரக்குப் பாதை 1,506 கிலோ மீட்டர் தூரத்திற்கு உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி பகுதியில் இருந்து மகாராஷ்டிராவின் ஜவஹர்லால் நேரு துறைமுகம் வரை இணைக்கிறது.
கிழக்கு சரக்குப் பாதை 1,337 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பஞ்சாபின் சாஹ்னேவா பகுதியில் தொடங்கி பீகாரின் சோன்நகர் வரை செல்கிறது.
இத்திட்டத்தின் மூலம் சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
மேலும், இரட்டை அடுக்கு கொள்கலன் ரயில்களை இயக்குவதன்மூலம் தரைவழிப் போக்குவரத்திற்கான செலவு பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஒரே பாதையில் பயணிகள் ரயில்களும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டதால் டெல்லி-மும்பை, டெல்லி-கோல்கத்தா பாதைகளில் 115 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை அதிக நெரிசல் நிலவியது.
இதனால் பயணிகள் ரயில்கள் வந்து செல்வது அடிக்கடி தாமதமாகின.
தற்போது சரக்கு ரயில்கள் தனிப்பாதைக்கு மாற்றப்பட்டுள்ளதால், வழக்கமான ரயில் பாதைகளில் நெரிசல் குறைவதால் பயணிகள் ரயில்களைத் துல்லியமான நேரத்திலும் கூடுதல் வேகத்திலும் இயக்க முடியும். மேலும், பண்டிகை, கோடைக் காலங்களில் கூடுதல் பயணிகள் ரயில்களை இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், தொழில் நகரங்கள், சந்தைகளை நேரடியாக இணைப்பதால், தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களை விரைவாகக் கொண்டு சேர்க்க முடிகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு, ஏற்றுமதித் துறைக்கு இத்திட்டம் புதிய வேகத்தைக் கொடுத்துள்ளது.
