மேற்கு வங்கத் தேர்தல் களத்தில் 2,926 வேட்பாளர்கள்

மேற்கு வங்கத் தேர்தல் களத்தில் 2,926 வேட்பாளர்கள்

2 mins read
ac803027-8c21-4554-95b7-ef7b8a256108
மேற்கு வங்கச் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. - படம்: இந்தியத் தேர்தல் ஆணையம்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 2,926 பேர் போட்டியிடுவதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கச் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல் கட்டத்தில் 152 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. முதல் கட்டத்தில் 1,478 பேரும் இரண்டாம் கட்டத்தில் 1,448 பேரும் போட்டியிடுகின்றனர்.

ஏப்ரல் 9ஆம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில், அதற்கு மறுநாள் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஏப்ரல் 13 பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களைத் திரும்பப்பெற அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை அரசிதழில் வெளியிடுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வேட்புமனுக்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான வாக்குச்சீட்டுகளில் வேட்பாளர்களின் வரிசை எண், சின்னம் போன்ற முக்கிய விவரங்களுடன் அவர்களின் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெறும். இது வாக்காளர்கள் அவர்களை எளிதாக அடையாளம் காண உதவும்.

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முனைப்புக் காட்டி வருகிறது. அதே நேரத்தில், கடந்த முறை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக, இம்முறை அங்கு ஆட்சியைக் கைப்பற்றும் இலக்குடன் தேர்தல் பணியாற்றி வருகிறது.

பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்