புதுடெல்லி: இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 588 தொல் பொருள்களில், 297 பொருள்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் இது குறித்து மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாகத் தகவல் வெளியிட்டார்.
பழங்காலப் பொருள்களின் சட்டவிரோத விற்பனையைத் தடுக்க இந்தியா - அமெரிக்கா இடையே கலாசாரச் சொத்துக்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது தொல் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக கஜேந்திர செகாவத் தெரிவித்தார்.
“இந்தியாவை விட்டு இதுவரை 588 தொல்பொருள்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளன. இவற்றில் 297 பொருள்கள் கடந்தாண்டு அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியது,” என்று அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் யுனெஸ்கோ, அனைத்துலக காவல்துறை ஆணையம் ஆகிய அனைத்துலக அமைப்புகளுடன் தேவைக்கேற்ப இந்தியா இணைந்து செயல்படுவதாகவும் கஜேந்திர செகாவத் குறிப்பிட்டார்.

