தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 2வது ஊழியரின் உடல் மீட்பு: சிக்கியுள்ள எழுவரை மீட்க முயற்சி

2 mins read
317e6eb3-e77e-4c3b-abf0-a31f87dec5ee
பல்வேறு மத்திய, மாநில அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. - படம்: என்டிடிவி ஊடகம்
multi-img1 of 2

கவுகாத்தி: அசாம் மாநிலம், திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய மற்றொரு ஊழியரின் உடல் சனிக்கிழமை காலை (ஜனவரி 11) குவாரியில் இருந்து மீட்கப்பட்டது.

புதன்கிழமை உம்ராங்சுவில் உள்ள சுரங்கத்தில் இருந்து முதல் உடல் வெளியே கொண்டு வரப்பட்ட நிலையில், இப்போது இரண்டாவது உடல் மீட்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை திடீரென நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் குவாரியில் ஒன்பது ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.

தற்போது மீட்கப்பட்ட ஊழியர் லிஜென் மாகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 27 வயதான இவர், திமா ஹசாவில் வசிக்கிறார்.

“உம்ராங்சுவில் மீட்பு நடவடிக்கைகள் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தொடர்கின்றன. இந்த இக்கட்டான நேரத்திலும் நம்பிக்கையையும் வலிமையையும் நாங்கள் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்,” என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) முக்குளிப்பாளர்களிடம் சுரங்கத்தில் தேங்கிய தண்ணீரில் மாகரின் உடல் மிதந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுமார் 310 அடி ஆழமுள்ள குவாரியில் ஓஎன்ஜிசி மற்றும் கோல் இந்தியா நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட சிறப்பு இயந்திரங்கள் மூலம் தண்ணீர் அகற்றும் பணி தொடர்ந்தது.

‘’இது சட்டவிரோத சுரங்கம் அல்ல, கைவிடப்பட்ட சுரங்கம். முதல் முறையாக நிலக்கரி எடுப்பதற்காக தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் நுழைந்த போது இந்த விபரீதம் நடந்துள்ளது,” என்று முதல்வர் சர்மா கூறினார்.

ஊழியர்களின் தலைவரை கைது செய்துள்ளதாகவும், காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்