புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு புதன்கிழமை காலை (செப் 25) வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குப்பதிவு மையங்களைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
பல வாக்குச்சாவடிகளில் ஆண்களை விட ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்ததை காண முடிந்தது.
கண்காணிப்புக் கேமரா வசதியுடன் 3,502 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் 157 வாக்குச்சாவடிகள் முழுக்க முழுக்க பெண்களால் நிா்வகிக்கப்பட்டன.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
புதன்கிழமை தேர்தல் நடைபெற்ற 26 பேரவைத் தொகுதிகளில் 239 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இத்தோ்தலில் 61.38 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. ஒரு சில தொகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குகள் பதிவாகின.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீா் பகுதியில் உள்ள ஸ்ரீநகா், புத்காம், கந்தா்பால் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் புதன்கிழமை இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தொகுதிகளுக்கான மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தோ்தல் அக்டோபா் 1ஆம் தேதி நடைபெறுகிறது. அக்டோபா் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதற்கிடையே வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் குறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதன்முறையாக வாக்களிக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கு அவர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி உரிமைக்காகவும் வளப்பத்துக்காகவும் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

