திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதனால் சபரிமலையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாள்களாக எழுந்து வந்துள்ளது.
இதையடுத்து சபரிமலையில் அனைத்துலக கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் சபரிமலை, எரிமேலி தெற்கு மற்றும் மணிமாலை ஆகிய நகரங்களுக்கு இடையே அமைய உள்ளது.
கேரள மாநிலத்தின் 5வது அனைத்துலக விமான நிலையமாக உருவாக இருக்கும் இந்த விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதற்கான நிலத்தைக் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
சபரிமலை விமான நிலையத் திட்டத்துக்கு மொத்தம் 1,039.879 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலங்கள் மணிமலை மற்றும் எரிமேலி தெற்கு ஆகிய பகுதிகளில் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால், அங்கு வசிக்கும் 352 குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி மறுவாழ்வு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விமான நிலையம் அமைப்பதற்காக வெட்டப்பட வேண்டிய மரங்கள் மற்றும் மாற்றப்பட வேண்டிய வீடுகள் உள்ளிட்ட விவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. விமான நிலையம் அமைக்க மொத்தம் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன. அவற்றில் ரப்பர் மரங்கள் 3.3 லட்சம், தேக்கு மரங்கள் 2 ஆயிரத்து 492, காட்டுப்பலா மரங்கள் 2 ஆயிரத்து 247, பலா மரங்கள் 1,131, மகோகனி மரங்கள் 828, மா மரங்கள் 184 ஆகும்.
அது மட்டுமின்றி சில கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களும் பாதிக்கப்படுகின்றன. அவற்றுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்தத் தகவல்கள், சபரிமலை அனைத்துலக கிரீன் பீல்டு விமான நிலையத் திட்டம் தொடர்பாக கோட்டயம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.