புதுடெல்லி: சுகாதாரம், வேளாண்மை, நீடித்த நிலைத்தன்மைமிக்க நகர உருவாக்கம் ஆகிய துறைகளை மையப்படுத்தி, ரூ.990 கோடி மதிப்பில் டெல்லியில் மூன்று செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் உருவாகின்றன. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு ஆய்வு, கண்டுபிடிப்புகளில் அனைத்துலக அளவில் இந்தியாவை வலுவான நாடாக மாற்ற இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த சிறப்பு மையங்கள் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் மேம்பாட்டுக்கும் புதிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் இந்த மையங்கள் உறுதுணையாக இருக்கும். அதன்மூலம் நவீன வேலைவாய்ப்புகள் உருவாகும். பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும். இவை இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் தலைமையின்கீழ், தொழில் துறை தலைவர்கள், நிறுவனங்களின் பங்களிப்போடு செயல்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

