புனே: இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே வட்டாரத்தில் புதன்கிழமையன்று (அக்டோபர் 2) ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து தீப்பிடித்துக்கொண்டதில் மூவர் மாண்டனர்.
விமானிகள் இருவரும் பொறியாளர் ஒருவரும் மாண்டனர். அச்சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை சுமார் 6.45 மணிக்கு பவ்தன் பகுதியில் நிகழ்ந்தது. அப்பகுதிக்கு அருகே உள்ள கோல்ஃப் வளாகத்தில் இருக்கும் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து புறப்பட்ட பிறகு ஹெலிகாப்டர் விழுந்தது.
விமானிகளான பரம்ஜித் சிங், ஜிகே பிள்ளை ஆகியோரும் பிரித்தம் பரத்வாஜ் எனும் பொறியாளரும் ஹெலிகாப்டரில் இருந்தனர்.
விழுந்த ஹெலிகாப்டர் புனேயில் இயங்கிக்கொண்டிருந்தது என்றும் அது ஹெரிட்டேஜ் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்தியாவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது. அது, மும்பை விமான நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தது.
ராய்காட் பகுதிக்குச் செல்ல அந்த ஹெலிகாப்டரில் தாம் பயணம் மேற்கொள்ளவிருந்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுனில் டட்காரே தெரிவித்தார்.
சம்பவம் பதிவான படங்களிலும் காணொளிகளிலும் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததையும் அதிலிருந்து பெரிய அளவில் புகை வெளியானதையும் காண்பித்தன. தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
ஹெலிகாப்டர் விழுந்ததற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், அப்பகுதியில் காணப்பட்ட மோசமான பனிமூட்டம் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆகஸ்ட் மாதம், மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று புனேயின் பாவ்ட் கிராமத்தில் விழுந்தது. அந்த ஹெலிகாப்டரில் இருந்த நால்வரும் உயிர் தப்பினர் என்று தெரிவிக்கப்பட்டது.