போபால்: மத்தியப் பிரதேசத்தில் தமோ நகரில் செயல்பட்டு வரும் சஞ்சீவினி மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் பணியாற்றி வருவதாகப் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறையினரும் காவல்துறையினரும் இணைந்து அந்த மருத்துவமனையில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணியாற்றிய குமார் சச்சின் யாதவ், ராஜ்பால் கவுர், அஜய்மவுரியா ஆகியோர் போலி மருத்துவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான போலி மருத்துவர்கள் ரூ.10 லட்சம் கொடுத்து போலி எம்பிபிஎஸ் சான்றிதழை பெற்று உள்ளனர். அவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவர்களாக பணியாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உள்ளனர் என்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமோ பகுதியைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சஞ்சீவினி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த சஞ்சீவினி மருத்துவமனைகளில் 14 போலி மருத்துவர்கள் பணியாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்ட விவரம் தெரியவில்லை.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளகப் பயிற்சி பெறவும், ராஜஸ்தான் மருத்துவக் கழகத்தில் பதிவு பெறவும் உதவிய போலித் தகுதித் தேர்வுச் சான்றிதழ்களுக்காக, கூட்டாக ரூ.74 லட்சம் செலுத்தியதாகக் கூறப்படும் மூன்று வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளை ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. மூவரும் கஜகஸ்தானில் தங்களது எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்திருந்தனர், ஆனால் மருத்துவம் செய்வதற்குத் தேவையான கட்டாய வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியிருந்தது தெரியவந்துள்ளது.

