குஜராத்: அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து சென்னையில் இருந்து புறப்படும், சென்னைக்கு வந்திறங்கும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வியாழன் (12.06.2025) அன்று அகமதாபாத்திற்கு 132 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
அகமதாபாத்தை நெருங்கிய வேளையில் விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதால் அங்கு தரையிறங்க முடியாத நிலையில், விமானம் சென்னைக்கே திரும்பி வர விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதையடுத்து பாதி தூரம் சென்ற விமானம், மீண்டும் சென்னைக்கே மாலை 3.05 மணிக்கு திரும்பி தரையிறங்கியது.
மேலும் மாலை 5.45 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய இண்டிகோ விமானமும் அகமதாபாத்தில் இருந்து மாலை 6.55 மணிக்கும் இரவு 10.10 மணிக்கும் சென்னை வர வேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
அந்த விமானங்களில் பயணம் செல்ல இருந்த பயணிகளுக்கு முழுத் தொகையும் திருப்பி வழங்கப்படும். அல்லது வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.