தீமூட்டி குளிர் காய்ந்த மூன்று சிறுமியர் மயங்கி விழுந்து மரணம்

1 mins read
1b7835e2-d72c-4bfd-803c-8d489a8d2583
குப்பைக் கழிவுகளில் இருந்து நச்சுப் புகை வெளியேறியதால் சிறுமியர் மாண்டதாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: இணையம்

சூரத்: குஜராத்தில் குளிர் காய தீமூட்டிய சிறுமியர் மூவர் மூச்சுத் திணறி மாண்டனர்.

சூரத் மாவட்டத்தின் பாலி கிராமத்தில் வெள்ளிக்கிழமை அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து சிறுமியர் ஒன்றுசேர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தபோது குளிர் அதிகம் நிலவியதால், குப்பைக்கழிவுகளைத் திரட்டி தீ மூட்டினர்.

அந்த நெருப்பில் ஐவரும் குளிர்காயத் தொடங்கிய சில நிமிடங்களில் அனைவரும் வாந்தி எடுத்ததுடன், மயங்கி விழுந்தனர்.

அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர், பாதிக்கப்பட்ட சிறுமியரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி துர்கா, 12, அமிதா, 14, அனிதா, 8, ஆகிய மூன்று சிறுமியர் உயிரிழந்தனர். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ மூட்டப் பயன்படுத்தப்பட்ட குப்பைக் கழிவுகளில் இருந்து வெளியேறிய நச்சுப்புகையை சுவாசித்ததால் மூவரும் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகக் குறிப்பிட்ட காவல்துறை, பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னர் தான், சிறுமியரின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றது.

குறிப்புச் சொற்கள்