தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: அமைச்சர் எச்சரிக்கை

2 mins read
33cb7616-9532-4589-afae-352156858b82
ஏற்றுமதி சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டதால் வேலை இழப்பு ஏற்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். - படம்: தமிழ் கூடல்

புதுடெல்லி: இந்தியாவில் வருடாந்திர வரவுசெலவுத் திட்டத்துக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் திட்டத்திற்கான நிதி தாமதமானது, ஜிஎஸ்டிக்குப் பிந்தைய வருவாய் குறைந்தது, வெளிப்புற வர்த்தகத் தாக்கம், குறிப்பாக அமெரிக்காவின் அண்மைய வரி விதிப்பு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முன்வைத்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தீர்க்கப்படாத மத்திய-மாநில கணக்கியல் சிக்கல்களால் தமிழ்நாட்டின் நிதி குறியீடு பாதிக்கப்பட்டு, அதன் அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பைக் குறைக்கிறது,” என்று அவர் வாதிட்டார். இண்டியன் எக்ஸ்பிரஸ் இத்தகவலை வெளியிட்டிருந்தது.

“நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 திட்டத்திற்கு மத்திய அரசு அக்டோபர் 2024ல் ஒப்புதல் அளித்தது. இருப்பினும், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஒப்புதலின் முழுப் பலனையும் மாநிலம் இன்னும் பெறவில்லை,” என்று தென்னரசு கூறினார்.

இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்கிற்கு தமிழ்நாடு ஏற்கனவே சுமார் ரூ.9,500 கோடியை முன்பணம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், “மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அவை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்ற நகரங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல்களுடன் ஒத்துப்போகவில்லை,” என்றும் அவர் கூறினார்.

உள்கட்டமைப்புக்கு அப்பால், உலகளாவிய வர்த்தக இடையூறுகளுக்கு தமிழகம் ஆளாகியிருப்பது குறித்து அமைச்சர் விளக்கினார்.

அண்மைய அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

“தமிழ்நாட்டின் பொருள்கள் ஏற்றுமதியில் 31% அமெரிக்க சந்தைக்கு அனுப்பப்படுவதால் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்படுகிறது,” என்பதை அவர் சுட்டிக்காட்டினார்

“இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் 28% தமிழ்நாடு பங்களிக்கிறது. இத்துறை, 75 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. தற்போதைய நிலைமை தொடர்ந்தால் 30 லட்சம் வேலைகளுக்கு ஆபத்து ஏற்படலாம்,” என்று அமைச்சர் தென்னரசு எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்