இஸ்ரேலியப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; இந்தியர் மூவருக்கு மரண தண்டனை

இஸ்ரேலியப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; இந்தியர் மூவருக்கு மரண தண்டனை

2 mins read
d950021f-1ed5-4a44-85a2-7c426a5ec119
சுற்றுலாப் பயணியைக் கால்வாய்க்குள் தள்ளி கொலை செய்துவிட்டு, இஸ்ரேலியப் பெண் சுற்றுலாப் பயணி உட்பட இரண்டு பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த (இடமிருந்து) மலேஷ், சாய், சரணப்பா.   - படம்: என்டிடிவி

பெங்களூரு: இஸ்ரேலைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் 2025 மார்ச் மாதம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றார்.

அப்போது அவர், ஹம்பி பகுதியில் உள்ள 29 வயது இளம்பெண் ஒருவரின் வீட்டில் விருந்தினராகத் தங்கினார்.

மார்ச் 6ஆம் தேதி மாலை அந்த இஸ்ரேலியப் பெண் தாம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் மூன்று ஆண் சுற்றுலாப் பயணிகளுடன் ஹம்பி அருகே உள்ள துங்கபத்ரா கால்வாய் அருகே அமர்ந்திருந்தனர்.

அந்நேரம் அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மலேஷ், சாய், சரணப்பா ஆகிய மூவரும் கால்வாய் அருகே அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள், ஆண் சுற்றுலாப் பயணிகள் மூவரையும் கால்வாய்க்குள் தள்ளிவிட்டனர்.

பின்னர், அவர்கள் இஸ்ரேலியப் பெண்ணையும், அவருடன் சென்ற இளம்பெண்ணையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

கால்வாய்க்குள் தள்ளிவிடப்பட்ட ஆண் சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மற்ற இருவரும் நீந்திக் கரைசேர்ந்தனர்.

இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுற்றுலாப் பயணியைக் கால்வாய்க்குள் தள்ளிக் கொலைசெய்துவிட்டு இஸ்ரேலியப் பெண் உட்பட இருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான மலேஷ், சாய், சரணப்பா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் மீதான வழக்கு கொப்பல் மாவட்டம், கங்காவதி நகர முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மலேஷ், சாய், சரணப்பா ஆகிய மூவர்மீதான குற்றச்சாட்டுகளும் மெய்ப்பிக்கப்பட்டதால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்