வெளிநாட்டிலிருந்து கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூன்று தமிழக ஆடவர்கள்

வெளிநாட்டிலிருந்து கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூன்று தமிழக ஆடவர்கள்

2 mins read
489c9ae6-904c-43dc-990a-d8d30b227e77
மூன்று தமிழக ஆடவர்களும் குவைத்திலிருந்து வர பயன்படுத்திய படகு. - படம்: பிடிஐ

மும்பை: குவைத்திலிருந்து கடல் வழியாக கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூவரை மும்பை காவல்துறை கைதுசெய்தது.

நிட்சோ டிட்டோ, 31, விஜய் வினய் ஆன்டனி, 29, ஜே சகாயட்டா அனிஷ், 29, என்ற அம்மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது.

அவர்களை பிப்ரவரி 10ஆம் தேதிவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அவர்களுடைய கடப்பிதழ்களைப் பறித்து வைத்துக்கொண்டு, மோசமாக நடத்திய முதலாளியிடமிருந்து தப்பித்த அவர்கள், வேறு வழியின்றி இப்படிக் கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றனர் என்று அவர்களுடைய வழக்கறிஞர் சுனில் பாண்டே கூறியுள்ளார்.

அம்மூவரும் மீனவர்கள் எனச் சொல்லப்படுகிறது.

தாங்கள் குவைத்திலிருந்து சவூதி அரேபியா, துபாய், பாகிஸ்தான் வழியாக மும்பையை வந்தடைந்ததாகவும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

ஆன்டனியும் அனிஷும் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள்; டிட்டோ ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்.

கடந்த ஈராண்டுகளாக குவைத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் கடினமான சூழலில் தாங்கள் வேலை செய்து வந்ததாக அவர்கள் கூறினர்.

தங்களது கடப்பிதழ்களைப் பறித்து வைத்துக்கொண்ட முதலாளி, சம்பளத்தையும் சரிவரக் கொடுக்காமல் அடித்துத் துன்புறுத்தினார் என்றும் அவர்கள் சொன்னதாகக் காவல்துறை தெரிவித்தது.

இதனையடுத்து, ஜனவரி 28ஆம் தேதி தங்கள் முதலாளியின் படகை அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு அவர்கள் குவைத்திலிருந்து கிளம்பியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) காலை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த மும்பை கடலோரக் காவல்துறையினர், அவர்களின் படகைக் கண்டு, அவர்களைக் கைதுசெய்தனர்.

அம்மூவரின் கைது குறித்தும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துவிட்டதாகக் காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்