ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

2 mins read
44bc98d5-eb97-4d94-b51c-8dba250a0146
காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய எல்லைப் படை வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அங்கு பயங்கரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

அதனையடுத்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இந்திய எல்லைப் படையினரும் இணைந்து மச்சல், குப்வாரா ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் பயங்கரவாதிகளைத் தேடி அழிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கின.

தேடுதல் வேட்டையின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்த இரண்டு பேர் மீது எல்லைப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அதேபோல் தங்தார் பகுதி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மற்றொரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

அப் பகுதியில் காவல்துறையும் ராணுவமும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவலில், “ரஜோரி மாவட்டத்தில் உள்ள கேரி மொஹ்ரா லத்தி மற்றும் தண்டல் கிராம பகுதியில் புதன்கிழமை இரவு 11.30 மணி அளவில் பாதுகாப்புப் படையினரால் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.

“தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சுமார் 11.45 மணி அளவில் பயங்கரவாதிகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18ஆம் தேதி தேர்தல்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்ட மன்றத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் மொத்தம் 23.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் மொத்தம் 279 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தெற்கு காஷ்மீரின் 8 தொகுதிகளில் பாஜக போட்டியிடவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கின் 16 தொகுதிகளுக்கு 183 பேரும் ஜம்மு பிராந்தியத்தின் 8 தொகுதிகளுக்கு 96 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்