சென்னை: இந்திய நாட்டவர்களுக்கான 30 நாள் இலவச விசா திட்டத்தை மலேசியா 2027ஆம் ஆண்டுவரை நீட்டித்துள்ளது.
மலேசியா செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த இலவச விசா வழங்கப்படுகிறது.
இந்தியாவுக்கான மலேசியத் துணைத் தூதர் சரவணக்குமார், தென்னிந்தியா, இலங்கைக்கான சுற்றுலாத்துறை இயக்குநர் ஹிஷாமுடின் முஸ்தபா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலைத் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, ‘விசிட் மலேசியா 2026’ திட்டத்தின்கீழ் கடந்த 2023 டிசம்பரில் 30 நாள் இலவச விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்குப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மலேசியா சென்றுள்ளனர். அவர்களில் 71.7 விழுக்காட்டினர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
இதன் மூலம் சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனீசியா, சீனாவிற்கு அடுத்தபடியாக மலேசியாவின் முக்கியச் சுற்றுலாச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
மாறிவரும் அனைத்துலகப் பயணச் சூழலில் இந்தியச் சந்தையில் மலேசியாவின் வலுவான இடத்தை நிலைநிறுத்தவும், இருதரப்பு வணிகப் பங்காளித்துவத்தை விரிவுபடுத்தவும் இந்த இலவச விசா நீட்டிப்பு பெரிதும் உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்தியச் சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில், கோலாலம்பூர், ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் பகுதிகளைத் தாண்டி, சரவாக், லங்காவி, பினாங்கு, ஜோகூர், சபா போன்ற பகுதிகள் இயற்கை எழில், பண்பாடு, பாரம்பரிய உணவு வகைகள், குடும்பக் கேளிக்கைக்கு ஏற்ற நாட்டின் பிற பகுதிகளையும் உள்ளடக்கிய சுற்றுலாத் திட்டங்களை உருவாக்குமாறு சுற்றுலாப் பங்காளர்களை மலேசியச் சுற்றுலா வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் தனது விளம்பர உத்திகளை மேலும் தீவிரப்படுத்த மலேசியா திட்டமிட்டுள்ளது.


