மேற்கு ஆசியப் பதற்றம்: இந்தியாவிலுள்ள வெளிநாட்டினருக்கு 30 நாள் விசா நீட்டிப்பு

மேற்கு ஆசியப் பதற்றம்: இந்தியாவிலுள்ள வெளிநாட்டினருக்கு 30 நாள் விசா நீட்டிப்பு

2 mins read
da729171-7f65-4460-8263-c95e0cf225a1
அனுமதி காலத்துக்கு மேல் தங்கியோருக்கு அபராதம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள ராணுவ மோதல் காரணமாக சொந்த நாட்டுக்குத் திரும்ப இயலாத வெளிநாட்டினருக்கு ஒரு மாத விசா நீட்டிப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இ-விசா உள்ளிட்ட அனைத்து வகையான விசாக்களும் முடிவடையக்கூடிய நிலையில் இருப்போருக்கு அந்த நீட்டிப்பு இலவசமாக வழங்கப்படும் என துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர், ஈரான் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பின்னர் விசா தொடர்பாக பாதிக்கப்பட்டு இருந்தால், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் காட்டிலும் கூடுதலாகத் தங்கியதற்காக அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது என்பதும் ஓர் அறிவிப்பு.

மேலும், பயண இடையூறால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் இந்தியாவை விட்டு வெளியேற அனுமதிக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.

வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டவுடன், இலவசமாகவே அவர்கள் வெளியேறி தங்களது சொந்த நாட்டுக்கான பயணத்தைத் தொடரலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விசா நீட்டிப்பு மற்றும் வெளியேறுவதற்கான அனுமதி ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்ய இயலாத வெளிநாட்டினர், புலம்பெயர்ந்தோருக்கான சட்டத்தை மீறியதாகக் கருதப்பட மாட்டார்கள்.

விமானங்கள் திருப்பிவிடப்பட்ட காரணத்தால் இந்தியாவிற்கு வர நேர்ந்த வெளிநாட்டினருக்கு ‘தற்காலிகத் தரையிறங்கும் அனுமதி’ (TLP) வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சலுகைகள், விசா குழப்பத்தில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் வாயிலாக கத்தாரிலிருந்து ஏறத்தாழ 500 இந்தியர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளதாக டோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.

அவர்கள் கேரள மாநிலத்தின் கொச்சி நகருக்கும் இதர இடங்களுக்கும் சென்றதாக அந்தத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

கத்தாரின் வான்வெளியில் ஒரு பகுதியில் மட்டுமே போக்குவரத்து இயங்குவதால் கத்தார் ஏர்வேஸ் விமானப் பயணங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நடைபெறுவதாகவும் அது தனது பதிவில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
விசாசுற்றுப்பயணிவெளிநாட்டவர்