இடம் மாற்றி இறக்கிவிடப்பட்டதால் வெளிநாட்டு விமானப் பயணிகள் தவிப்பு

இடம் மாற்றி இறக்கிவிடப்பட்டதால் வெளிநாட்டு விமானப் பயணிகள் தவிப்பு

fallback-0
பெங்களூரு கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்திற்கு மனிதத் தவறே காரணம் எனக் கூறப்பட்டது. படம்: ஊடகம்

18 Mar 2023 - 4:07 pm

1 mins read

பெங்களூரு: அனைத்துலக வருகைப் பகுதிக்குச் செல்ல வேண்டிய பயணிகள் உள்நாட்டு வருகைப் பகுதியில் இறக்கிவிடப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

இந்தத் தவறு, இந்தியாவின் பெங்களூரில் உள்ள கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் நிகழ்ந்தது.

கொழும்பில் இருந்து வந்த 30 பயணிகள் இதனால் தவிப்பிற்கு ஆளாக நேர்ந்தது.

"மார்ச் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல்173 விமானத்தில் வந்த பயணிகள் 30 பேர் அனைத்துலக வருகைப் பகுதியில் இறக்கிவிடப்படுவதற்குப் பதிலாக உள்நாட்டு வருகைப் பகுதியில் இறக்கிவிடப்பட்டனர். அதனால் உள்நாட்டுப் பயணிகள் பயணப்பைகளைக் கோரும் பகுதிக்கு அவர்கள் செல்ல நேர்ந்தது," என்று விமான நிலையத்தின் பேச்சாளர் விளக்கமாகக் கூறினார்.

இருப்பினும், இந்தத் தவறு குறித்து தெரியவந்ததும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினருக்கும் குடிநுழைவுப் பிரிவிற்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அப்பயணிகள் குடிநுழைவு அனுமதிக்காக அனைத்துலக வருகைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மனிதத் தவறே இக்குழப்பத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.