சென்னை: தொழிற்சாலைகள் அதிகரித்து வரும் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 150 கோடி ரூபாயில் 3,000 படுக்கைகளுடன் கூடிய தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்ட அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் எட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கிய 50 தொழில் பூங்காக்களை ‘சிப்காட்’ எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைத்துள்ளது.
அவற்றில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பணியாற்றுகின்றனர். அவர்கள் தங்குமிடத்திற்கு அதிகம் செலவிடுகின்றனர். எனவே, குறைந்த வாடகையில் தங்குமிட வசதியை அரசு ஏற்படுத்தித் தருகிறது.
தற்போது, காஞ்சிபுரத்தில் பிள்ளைப்பாக்கம், ஸ்ரீ பெரும்புதூர், ஒரகடம், கிருஷ்ணகிரியில் புதிய தொழிற்சாலைகள் அதிகம் வருகின்றன. அதற்கு ஏற்ப தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே, இந்த மாவட்டங்களிலும் தலா இரு இடங்களில் மொத்தம் 3,000 படுக்கைகளுடன் தங்கும் விடுதிகளைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.