கொச்சி: தவறில்லாத வாக்காளர் பட்டியலே ஜனநாயகத்தின் அடித்தளம் என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் சனிக்கிழமை (மார்ச் 7) செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடைமுறை என்பது மிகவும் வெளிப்படையானது என்றார்.
கேரளாவில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 2.69 கோடி வாக்காளரகளுக்காக மாநிலம் முழுவதும் 30,471 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கண்காணிப்புக் கேமரா வசதி நூறு விழுக்காடு உறுதி செய்யப்பட உள்ளதாகவும் திரு ஞானேஷ் குமார் கூறினார்.
இவற்றுள் 397 வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும். கேரளத்தில் முதன்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெற உள்ளது.
22 ஆண்டுகளுக்கு முன்பு தாம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் ஆட்சியராகப் பணியாற்றியதை நினைவுகூர்ந்த அவர், அம்மாநிலத்தில் 18 ஆண்டுகள் தாம் பணியாற்றியதாகக் குறிப்பிட்டார்.
நாட்டின் பிற பகுதிகளுக்கும் உலகுக்கும் ஜனநாயக செயல்முறைகளைக் கற்பித்த மாநிலம் கேரளா என்றும் கடந்த 1960களில் முதன்முதலாக கேரளாதான் தேர்தல் நடத்தை விதிமுறைகளை உருவாக்கியது என்றும் கூறினார்.
அந்த விதிமுறைகளைத்தான் பின்னர் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்த அவர், கடந்த 1982ஆம் ஆண்டு கேரளாவின் பரவூர் தொகுதியில்தான் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தகுதியுள்ள வாக்காளர் விடுபடவோ, தகுதியில்லாத வாக்காளர் சேர்க்கப்படவோ கூடாது என்பதே ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கையின் தெளிவான நோக்கம் என்றார் அவர்.

