புதுடெல்லி: குஜராத்தில் ஆசியச் சிங்கங்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 32 விழுக்காடு அதிகரித்திருப்பது அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் கூறியுள்ளார்.
அண்மைய கணக்கெடுப்பில் 891 ஆசியச் சிங்கங்கள் குஜராத்தில் இருப்பதாகப் பதிவாகியுள்ளது. 2020ல் அந்த எண்ணிக்கை 674ஆக இருந்தது.
16வது முறையாக நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கை மே 10 முதல் 13ஆம் தேதிவரை இடம்பெற்றது.
மாநிலத்தின் 11 மாவட்டங்களில் 35,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இரண்டு கட்டங்களாக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக ‘பிரெஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ தகவல் வெளியிட்டுள்ளது.
மே 10, 11ஆம் தேதிகளில் முதற்கட்டக் கணக்கெடுப்பும் 12, 13ஆம் தேதிகளில் இறுதிக் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையில் தொண்டூழியர்கள் ஏறத்தாழ 3,000 பேர் கலந்துகொண்டனர்.
ஆசியச் சிங்கங்கள் குஜராத்தின் கிர் தேசியப் பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மட்டும் காணப்படுகின்றன.
1936ஆம் ஆண்டு இத்தகைய கணக்கெடுப்பு முதன்முறையாக நடத்தப்பட்டது. அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் ஆசியச் சிங்கங்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
நேரடியாகப் பார்க்கப்படும் சிங்கங்கள் மட்டுமே இதுவரை கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு முதல் முறையாகக் கண்காணிப்பு கேமராக்கள் கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்டன.