புதுடெல்லி: உலகளவில் இருக்கும் சுமார் 3,200,000 ஆலயங்கள் ஒரு சம்மேளனத்தின்கீழ் வரக்கூடும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பொருளியல் ரீதியாக அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ஆறு லட்ச கோடி ரூபாய் (93.45 பில்லியன் வெள்ளி). அந்த ஆலயங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் உள்ளவை.
உலகளவில் ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளையும் சுற்றுலாத் துறையையும் மேம்படுத்துவது போன்றவை இலக்குகளாகும். மேலும், பொதுமக்கள் எளிதில் செல்லக்கூடிய தலங்களாக ஆலயங்களை உருவாக்குவதும் இலக்குகளில் அடங்கும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் அனைத்துலக ஆலய மாநாடு, காட்சிக்கூடம் (International Temples Convection and Expo) சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துலக ஆலய மாநாடு, கண்காட்சி, ஆலய நிர்வாகப் பணிகளுக்கு உலகளவில் இருக்கும் ஆகப் பெரிய குழுவாகும். அச்சந்திப்பு, இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை திருப்பதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் அனைத்துலக ஆலய மாநாடு, காட்சிக்கூட சந்திப்புக்கு, லாபநோக்கமற்ற, சமயம் சாராத அந்தியோதய பிரதிஷ்டன் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்கிறது. இந்து, சீக்கிய, பெளத்த, சமண சமய நிலையங்களைச் சந்திப்பு ஒன்றுசேர்க்கும்.
ஒருவரையொருவர் தெரிந்துகொள்வதுடன் உலகளவில் ஆலயங்களின் மரபைப் பாதுகாத்தவாறு அவற்றின் கட்டமைப்புகளைப் புதுப்பிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு அனைத்துலக ஆலய மாநாடு, காட்சிக்கூடம் 2025 சந்திப்பு சிறந்த தளமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு உலகளவில் ஆன்மிகம் சார்ந்த சுற்றுப்பயணத் துறை பிரபலமடைந்திருக்கிறது. உலகில் ஆன்மிகம் சார்ந்த காரணங்களுக்காக சுற்றுப்பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, தினமும் வைஷ்னோ தேவி கோயிலுக்குப் போகும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது 32,000லிருந்து 40,000ஆகப் பதிவாகி வருகிறது. கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்கு முன்பு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 10,000லிருந்து 15,000ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், அம்ரித்சார் நகரில் உள்ள சீக்கிய பொற்கோயிலுக்குக் குறைந்தது 100,000 பக்தர்கள் செல்கின்றனர். இந்த எண்ணிக்கை, கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்கு முந்தைய காலத்தில் பதிவானதைவிட அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

