புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களில் 32 விழுக்காட்டினர் மீது குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், மொத்தமுள்ள எம்பிக்களில் 14% பேர் கோடீஸ்வரர்கள் என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் 233 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 32 விழுக்காட்டினர் கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தொடர்பாக வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும், 16 விழுக்காட்டினர், அதாவது 36 பேர் கடும் இந்தியத் தண்டனைச் சட்ட மீறல்களை எதிர்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
எம்பிக்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தபோது இத்தகவல்கள் கிடைத்ததாக ‘ஏடிஆர்’ அமைப்பு தெரிவித்தது.
ஒரு எம்பி தன் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதை ஒப்புக்கொண்டார். நான்கு உறுப்பினர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆக அதிகமாக, பாஜகவைச் சேர்ந்த 27 பேர் குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். காங்கிரசில் 12 பேர், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தலா நான்கு பேர் மீது வழக்குகள் உள்ளன.
இதனிடையே, மாநிலங்களவை எம்பிக்களில் 14% (31 பேர்) நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளைக் குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதிகபட்சமாக, பாஜகவில் ஆறு கோடீஸ்வரர்கள் உள்ளனர். காங்கிரசைச் சேர்ந்த ஐந்து பேர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் நான்கு பேர், ஆம் ஆத்மி (2), பிஆர்எஸ் (2), தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூவர் நூறு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்தோரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.120.69 கோடியாகும். இவர்களில் ஒய்எஸ்ஆர் எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு ஏறக்குறைய 522 கோடி ரூபாய்.
பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த பண்டி பார்த்தசாரதி என்ற எம்பி, தமக்கு ரூ.5,300 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

