அமராவதி: மதுபான ஊழலில் சிக்கிய ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பியை மாநில காவல்துறையினர் சனிக்கிழமை (ஜூலை 19) கைது செய்தனர்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது ரூ.3,200 கோடி மதுபான ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட தனுஞ்சய் ரெட்டி, கிருஷ்ண மோகன் ரெட்டி, பாலாஜி கோவிந்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியிடம் இந்த ஊழல் குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, விஜயவாடா அலுவலகத்தில் வைத்து சனிக்கிழமை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பின்னர் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்டது, கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்களைக் கைது செய்வதற்கான பெரிய பழிவாங்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று ஒய்.எஸ்.ஆர்.சி.பி மூத்த தலைவர் மல்லாடி விஷ்ணு கூறினார்.
“ஆந்திர அரசின் நடவடிக்கைகள் எவ்வளவு பழிவாங்கும் விதமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு கூட்டணி அரசின் தோல்விகளையும் ஊழலையும் அம்பலப்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் இருப்போம்,” என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான நாராயண சுவாமிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு இதுவரை 40 பேரை குற்றவாளிகளாக சேர்த்து 11 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.