வெளிநாட்டு வேலை: 3,400க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய கும்பல் கைது

2 mins read
4a2c702b-f6b1-4f5f-ae8a-2a2a07729d33
படம்: - பிக்சாபே

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆயிரக்கணக்கான இந்திய மக்களை ஏமாற்றிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 இளையர்களை புதுச்சேரி இணையக் குற்றப்பிரிவு அதிகாரிகள் ஆகஸ்ட் 2ஆம் தேதி கைது செய்தனர். 

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு குறித்து ஃபேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றைப் புதுச்சேரியைச் சேர்ந்த ரமேஷ் குமார் பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண்ணை அவர் தொடர்பு கொண்டபோது, தன்னை ஒரு நிர்வாக அதிகாரியாக அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், கனடாவில் அவருக்கு வேலை தருவதாக உறுதியளித்துள்ளார். 

மேலும், வேலை அனுமதி அட்டை, மருத்துவப் பரிசோதனை, காப்புறுதி போன்றவற்றுக்குத் தேவையான பணத்தை வைப்புத் தொகையாகச் செலுத்தினால் உறுதியாக வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். அவரிடமிருந்து கிட்டத்தட்ட 17,71,000 இந்திய ரூபாயைப் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் ரமேஷை ஏமாற்றியுள்ளார்.

இதனையடுத்து, புதுச்சேரி இணையக் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ரமேஷ் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்களது வங்கி பரிவர்த்தனை, டெலகிராம் தொடர்புகள், வாட்ஸ்ஆப் தொடர்புகள், இரவு தங்கும் இடங்களின் இருப்பிடம் முதலிய தரவுகளை வைத்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், குற்றவாளிகள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் பெங்களூரில் பதுங்கியிருப்பதாகவும் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. 

குற்றவாளிகளான சுபம் ஷர்மா, தீபக் குமார், ராஜ் கௌண்ட், நீரஜ் குர்ஜார் ஆகியோரைப் புதுச்சேரி இணையக் குற்றப்பிரிவு அதிகாரிகள் ஆகஸ்ட் 2ஆம் தேதி கைது செய்தனர். 

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குற்றவாளிகள் இது போன்று கூட்டாகச் சேர்ந்து இந்தியா முழுவதும் 3,400க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது தெரியவந்தது.

மேலும், அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.200 கோடிக்கு மேல் கொள்ளையடித்திருப்பதும் கண்டறியப்பட்டது.

அவர்களைத் தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன் முன்பு ஆகஸ்ட் 3ஆம் தேதி, முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இணைய வழியில் வருகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமாக எந்த செய்தியையும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும் அதனுடைய உண்மைத் தன்மை அறிந்த பிறகு பணம் செலுத்துங்கள் என்றும் புதுச்சேரி இணையக் குற்றப்பிரிவு அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

குறிப்புச் சொற்கள்