புதுடெல்லி: சிகரெட், புகையிலை, ஒருவித பானம் போன்ற பொருள்களுக்கான ஜிஎஸ்டியை 28 விழுக்காட்டில் இருந்து 35 விழுக்காட்டுக்கு உயர்த்த யோசனை முன் வைக்கப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டிக்கான அமைச்சர்கள் குழு அந்தப் பரிந்துரையை அளித்துள்ளதாக குழுவின் தலைவரும் பீகார் துணை முதல்வருமான சாம்ராட் சௌத்ரி திங்கட்கிழமை (டிசம்பர் 2) தெரிவித்தார்.
மேலும், ரூ.1,500 வரையிலான ஆயத்த ஆடைகளுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டியும் ரூ.1,500 முதல் ரூ.10,000 வரை உள்ள ஆடைகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என்றும் 10,000 ரூபாய்க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு 28 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றும் தகவல்கள் பரவுகின்றன.
மொத்தத்தில், 148 பொருள்களுக்கான வரி விகிதங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவுகள் ஜிஎஸ்டிக்கான மன்றத்தில் ஆலோசனை செய்யப்பட்டு இறுதி செய்யப்படும். அதன் பிறகே இந்த வரிவிதிப்பு மாற்றங்கள் அமலுக்கு வரும்.
ஜிஎஸ்டி உயர்வு அமல்படுத்தப்பட்டால் அதுதொடர்பான பொருள்களின் விலையும் உயரும்.
ஜிஎஸ்டி சாதனை
உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் அதிக வருவாயைப் பெற்றதையடுத்து, நவம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 8.5% அதிகரித்து ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ.34,141 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.43,047 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ரூ.91,828 கோடியாகவும், செஸ் ரூ.13,253 கோடியாகவும் உள்ளன.
இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. அக்டோபரில், 1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல், 9% ஆண்டு வளர்ச்சியுடன் இரண்டாவது சிறந்த ஜிஎஸ்டி வசூல் ஆகும். 2024 ஏப்ரலில் ரூ.2.10 லட்சம் கோடி என்று உச்சம் தொட்டது.