மும்பை: ஓமானில் வேலை பார்க்கச் சென்று பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட 36 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு மும்பை பாஜக பிரமுகர் கோவிந்த் பிரசாத் நன்றி தெரிவித்துள்ளார்.
பல்வேறு பணிகளுக்காக இந்தியாவைச் சேர்ந்த 36 பேர் ஓமான் சென்றிருந்தனர். அங்கு அவர் எதிர்பார்த்த பணிச்சூழல் அமையவில்லை என்பதுடன், பல்வேறு அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து 36 பேரும் இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஓமானில் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் தங்குமிடங்களில் அதிகமானோர் இருப்பதாகவும் அவர்கள் கூறியதைக் கேட்டு குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களுடைய கடப்பிதழ்களை முதலாளிமார்கள் பறித்துக்கொண்ட நிலையில், பல்வேறு வகையில் அச்சுறுத்தி வருவதாகவும் இந்திய ஊழியர்கள் கூறியதை அடுத்து, அவர்களின் குடும்பத்தார் வடக்கு மும்பையைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான கோவிந்த் பிரசாத்திடம் உதவி கேட்டு அணுகினர்.
இதுகுறித்து தகவலறிந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், உடனடியாக ஓமானில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு பேசினார்.
இந்தியாவில் உள்ள அதிகாரிகளும் விரைவாகச் செயல்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட 36 இந்தியர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பின்னர் ஓமானில் உள்ள குருத்வாராவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் கடப்பாட்டை வலியுறுத்தி, இதுபோன்ற வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அமைச்சர் கோயல் தனது குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.