உத்தராகண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 37 பயணிகள் மரணம்

2 mins read
378ad13d-ee6c-4bb9-b5d5-d3ad17f16122
பேருந்திலிருந்து பயணிகளை மீட்கும் பணியில் காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் அக்கம்பக்க கிராம மக்களும் ஈடுபட்டனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் மரணமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பவுரி என்ற இடத்தில் இருந்து ராம்நகர் நோக்கி திங்கட்கிழமை (நவம்பர் 4) பேருந்து சென்றுகொண்டிருந்தபோது காலை 8.25 மணியளவில் அந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அந்த மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் மார்ச்சுலா என்னும் இடத்தில் உள்ள பள்ளத்தாக்கில் திடீர் என்று அந்தப் பேருந்து கவிழ்ந்து 200 மீட்டர் ஆழத்தில் விழுந்தது.

பேருந்து கவிழ்ந்ததும் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கக் கிராம மக்கள் ஓடி வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 20க்கும் மேற்பட்ட பயணிகள் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டனர்.

45 பேர் அமரக்கூடிய அந்தப் பேருந்து விபத்தில் சிக்கியபோது கிட்டத்தட்ட 40 பயணிகள் அதில் இருந்ததாக அல்மோரா மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே கூறினார்.

பள்ளத்தாக்கில் காயங்களுடன் சிக்கித் தவிப்போரை விமானம் மூலம் மீட்க மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அவர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் 4 லட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு 1 லட்சம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்குத் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் காவல்துறையும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஓட்டுநர் தமது கட்டுப்பாட்டை இழந்ததால் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், நடந்தது என்ன என்று தீர விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்