தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷிலிருந்து ஊடுருவ முயன்ற 36 பேர் தடுத்து நிறுத்தம்

1 mins read
f914b051-90f4-4af1-8c6c-25d58de48f4e
தடுத்து நிறுத்தப்பட்டு, தங்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்ட பங்ளாதேஷியர்கள். - படம்: எக்ஸ் / ஹிமந்த பிஸ்வ சர்மா

கௌகாத்தி: பங்ளாதேஷிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 36 பேர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களது நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 36 பங்ளாதேஷியர்கள் ஸ்ரீபூமி, தெற்கு சல்மாரா பகுதிகளிலிருந்து அவர்களது நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்,” என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளத்தனமாகக் குடியேறியுள்ள பங்ளாதேஷியர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடுகடத்தும் பணியை அசாம் மாநிலம் தீவிரப்படுத்தியுள்ளது. அவ்வகையில், இம்மாதத் தொடக்கத்தில் ஸ்ரீபூமி பகுதியிலிருந்து 10 பேர் பங்ளாதேஷிற்கு நாடுகடத்தப்பட்டனர்.

அத்துடன், அரசாங்க நிலங்களிலும் வனத்துறைக்குச் சொந்தமான நிலப்பகுதிகளிலும் மேய்ச்சல் நிலங்களிலும் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளோரைக் கண்டறிந்து வெளியேற்றும் பணியையும் அசாம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், 32,358 ஹெக்டர் நிலப்பகுதி ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கோலாகாட் மாவட்டத்திற்குச் சென்று ஆக்கிரமிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர், அங்கு ஆயிரக்கணக்கான ஹெக்டர் நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறினார்.

சில குடும்பங்கள் 75 முதல் 100 ஹெக்டர் வரையிலான நிலப்பகுதியை ஆக்கிரமித்து, பொருளியல் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

அத்தகைய நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற அவர், தவறிழைத்தோர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

அத்துடன், அரசாங்கம் அமல்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்