பீகார் புனித நீராட்டு விழாவில் உயிரிழந்த 46 பேரில் 37 பேர் குழந்தைகள்

2 mins read
5628869f-8474-4822-8fe6-91e3baf2e339
பீகாரின் 15 மாவட்டங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடந்த புனித நீராட்டு விழா பெரும் சோகத்தில் முடிவடைந்தது. விழாவில் பங்கேற்ற 46 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் அவர்களில் 37 பேர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகை ‘ஜிவித்புத்ரிகா’.

அப்போது குழந்தைகளுடன் தாய்மார்கள் ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடுவது வழக்கம்.

பீகார் மட்டுமல்லாமல் ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நேப்பாள நாட்டிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அஷ்டமி திதியை முன்னிட்டு புதன்கிழமை (செப்டம்பர் 25) இந்தப் பண்டிகை பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது.

ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் குழந்தைகளுடன் பெண்கள் புனித நீராடியபோது எதிர்பாராதவிதமாக ஆங்காங்கே பலர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 46 பேர் மாண்டதாகவும் அவர்களில் 37 பேர் குழந்தைகள் என்றும் அதிகாரிகள் கூறினர். மூவரைக் காணவில்லை.

மரணத்தை பீகார் மாநில அரசு உறுதிப்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

கிழக்கு சம்பாரன், மேற்கு சம்பாரன், நாளந்தா, ஔரங்காபாத், கைமூர், பக்சர், சிவான், ரோத்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச், அர்வால் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 43 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

எஞ்சிய ஆறு பேரை தேடும் பணியில் மாநில பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்