லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அமிலம் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தண்டனை பெற்று, கடந்த 37 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ராஜேஷ் என்கிற ராஜுவை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.
ஆயுள் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக, ராஜு தொடர்ந்து தனது இருப்பிடத்தையும் அடையாளங்களையும் மாற்றிக்கொண்டே வந்துள்ளார்.
இறுதியாக, அவர் மத்தியப் பிரதேசத்தில் ‘பாபா’ போல் துறவி வேடத்தில் வாழ்ந்து வந்தார்.
சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் கூட்டுப் படையானது, உளவுத் தகவல் சேகரிப்பு, தொழில்நுட்ப வசதி மூலம் தொடர்ந்து கண்காணித்து ராஜுவைக் கண்டுபிடித்து, கைது செய்தது.
கைதானபோது, வெவ்வேறு முகவரிகளைக் கொண்ட அடையாள ஆவணங்களைக் காவலர்கள் ராஜுவிடமிருந்து மீட்டனர். அவரது மகன் மூலமாகவே குற்றவாளியின் அடையாளம் இறுதியாக உறுதி செய்யப்பட்டது.
ஆயுள் தண்டனையைத் தவிர்ப்பதற்காக ‘பாபா’ போல துறவி வேடமிட்டு, போலியான அடையாளத்துடன் ராஜு வாழ்ந்து வந்ததாக உத்தரப் பிரதேச காவல் அதிகாரிகள் கூறினர்.
வழக்கின் பின்னணி
1986, ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று சம்பவம் நடந்தது. ஷாஜகான்பூரின் பக்கா கட்ரா பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்து கொண்டிருந்த கங்காதீன் முனிம், ஓம் பிரகாஷ் ரஸ்தோகி ஆகிய இருவரும் நகைத் தொழிலுக்குத் தேவைப்படும் அமிலத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் ராஜுவுக்கும் இடையே ஒரு சொத்து தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதல் சண்டையாக மாறியது. அப்போது, ராஜு அமிலம் உள்ள கொள்கலனைப் பறித்து அவர்கள் இருவர் மீதும் வீசியதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தாக்குதலில், ஓம் பிரகாஷ் பலத்த தீக்காயங்களையும், கங்காதீன் குறைவான காயங்களையும் அடைந்தனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணை நீதிமன்றம் 1988 மே மாதம் கடும் காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக ராஜுவுக்கு ஆயுள் தண்டனையும், கொலை முயற்சி செய்ததற்காகக் கூடுதலாக ஏழு ஆண்டுகளும் தண்டனை விதித்தது.
ஆனால், உயர் நீதிமன்றத்தில் தனது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தபோது பிணையில் வெளியே வந்த ராஜு, அதன்பின் தலைமறைவானார். பல சகாப்தங்களாக அவர் கண்டுபிடிக்க முடியாதவராக இருந்தார். இந்நிலையில் இப்போது பிடிபட்டுள்ளதாக ‘இந்தியா டுடே’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“எவ்வளவு காலம் ஒரு குற்றவாளி தலைமறைவாக இருந்தாலும் அல்லது எத்தனை அடையாளங்களை மாற்றினாலும், சட்டம் இறுதியில் அவர்களைப் பிடித்துவிடும் என்பதை இந்தக் கைது நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது,” என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

