ரூ.38,000 கோடி நிலுவைத்தொகை: கர்நாடக முதல்வருக்குக் குத்தகைதாரர்கள் கெடு

ரூ.38,000 கோடி நிலுவைத்தொகை: கர்நாடக முதல்வருக்குக் குத்தகைதாரர்கள் கெடு

படங்கள்: டெக்கான் ஹெரால்ட், மஞ்சுநாத்ருத்ரையா.இன்

01 Oct 2026 - 4:05 pm

2 mins read

பெங்களூரு: நிலுவையில் உள்ள ரூ.38,000 கோடி ரூபாய் தொகையை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநிலக் குத்தகைதாரர்கள் சங்கம் (கேஎஸ்சிஏ), மாநில முதல்வர் டி.கே. சிவகுமாருக்குக் கெடு விதித்துள்ளது. தவறினால், அரசில் பரவலாக நடைபெறும் லஞ்ச ஊழல்களை அம்பலப்படுத்தப்போவதாக அது எச்சரித்துள்ளது.

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சங்கத் தலைவர் ஆர்.மஞ்சுநாத், “டிசம்பருக்குள் எங்களது பாக்கித் தொகை வழங்கப்படாவிட்டால், அனைத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவோம். கைது செய்யப்பட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம்,” என்று கூறினார். ஏறத்தாழ 1.5 லட்சம் குத்தகைதாரர்களைப் பிரதிநிதிக்கும் இந்தச் சங்கம், அனைத்து மாவட்டங்களிலும் பாதயாத்திரை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

பொதுப்பணி ஏலக்குத்தகைகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் தலையீடு அதிகரித்துள்ளதால் ஊழல் மோசமடைந்துள்ளதாக மஞ்சுநாத் குற்றம் சாட்டினார். இதனால், உண்மையான குத்தகைதாரர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் பெரும்பாலான பணிகள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்களுக்கே வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய ஆட்சியில் இருந்த தரகு லஞ்ச முறை, தற்போதைய ஆட்சியிலும் தொடர்வதாக அவர் வேதனை தெரிவித்தார். ஏலக்குத்தகை ஒப்புதல், கடன் கடிதங்கள் போன்றவற்றுக்காகத் தரகுப் பணம் தரவேண்டியுள்ளதாக அவர் கூறினார். பொதுப்பணித் துறை, பெருநகர பெங்களூரு அதிகார அமைப்பு (ஜிபிஏ) ஆகிய இரு துறைகள் மட்டுமே வெளிப்படையான ஏலக்குத்தகை முறையைப் பின்பற்றுவதாகச் சங்கம் சுட்டிக்காட்டியது.

முந்தைய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் ‘40 விழுக்காடு கமிஷன்’ குற்றச்சாட்டை முன்வைத்தபோது, அதற்குக் குத்தகைதாரர்களைப் பயன்படுத்திக் கொண்டதாக மஞ்சுநாத் ஆதங்கப்பட்டார். ஆனால், சித்தராமையா தம் ஆட்சிக் காலத்தில் குத்தகைதாரர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று அவர் சாடினார்.

காங்கிரஸ் அரசு தனது ‘உத்தரவாத’ திட்டங்களுக்குக் குத்தகைதாரர்களின் பணத்திலிருந்தே நிதியளிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், “எங்களுக்குப் பணமும் கிடைக்கவில்லை, வேலையும் கிடைக்கவில்லை. நாங்கள் நஞ்சு அருந்தி இறக்க வேண்டிய நிலையில் உள்ளோம்,” என்றார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் சிவகுமார், நிதி ஒதுக்கீடு இன்றி அளவுக்கதிகமான ஒப்பந்தங்களை வழங்கிய முந்தைய பாஜக அரசே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துச் சங்கம் வாக்குமூலம் தாக்கல் செய்தால் விசாரணைக்கு உத்தரவிடுவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கர்நாடகாமுதல்வர்குத்தகைதாரர்அரசாங்கம்