ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலத்தின் யமுனை ஆற்றில் குளிக்கச் சென்ற நான்கு சிறுமியர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும் இரு சிறுமியரின் உயிர் ஊசலாடுகிறது.
ஆக்ராவில் உள்ள கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை அந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது.
ஆக்ரா வட்டாரத்தில் அண்மை நாள்களாக கடுமையான வெப்பம் நிலவுகிறது.
அதனால், வெப்பத்தைத் தணிக்க நாகலா சுவாமி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு சிறுமியர் அருகில் உள்ள யமுனை ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அவர்களுடன் ராமி நாகலா என்னும் கிராமத்தைச் சேர்ந்த மேலும் இரு சிறுமியர் இணைந்துகொண்டனர்.
இன்ஸ்டகிராம் ரீலில் பதிவிட, சிறுமியர் ஆற்றில் இறங்கத் தொடங்கியதும் அவர்களில் ஒருவர் ஆற்றங்கரையில் இருந்தவாறு கைப்பேசியில் காணொளிப் படம் எடுத்தார்.
ஆற்றுக்குள் உற்சாகமாக இறங்கிக் குளித்துக்கொண்டு இருந்த சிறுமியர் தங்களை அறியாமல் ஆழமான பகுதிக்குச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
தப்பிக்க முயன்றும் சிறுமியரால் இயலவில்லை. அதனால், ஆறு சிறுமியரும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி மிதந்தனர்.
உயிரிழந்த சிறுமியர் நால்வரும் 10 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இரு சகோதரர்களின் மகள்களும் அவர்களுள் அடங்குவர்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டவர்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மீட்புப் படையினரும் விரைந்து சென்றனர். ஆயினும் சிறுமியரைக் காப்பாற்ற இயலவில்லை.
நான்கு சிறுமியர் உயிரிழந்ததால் ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியது. சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

