ஹைதராபாத்: வேலை மோசடியால் உக்ரேன் எல்லையை ஒட்டிய ரஷ்யப் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர் நால்வர், உடனடியாகத் தங்களை மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்நால்வரில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது முகம்மது சுஃபியானும் ஒருவர். மற்ற மூவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள்.
“தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள். அதிநவீன மோசடியால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்,” என்று கெஞ்சியபடி, சுஃபியான் ஒரு காணொளியைத் தம் குடும்பத்தாருக்கு அனுப்பியுள்ளார். அவர் ராணுவ உடையில் இருந்ததும் காணொளியில் தெரிந்தது.
உக்ரேன் - ரஷ்யா இடையே போர் நடந்துவரும் நிலையில், ரஷ்ய ஆதரவு வேக்னர் படையில் கட்டாயப்படுத்தி அவரைச் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராணுவப் பாதுகாப்பு உதவியாளர்கள் வேலை என உறுதியளித்து, கடந்த 2023 டிசம்பரில் தாங்கள் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சுஃபியான் கூறினார்.
நல்ல சம்பளம் எனக் கூறி, துபாயில் ஆட்சேர்ப்பு முகவர்கள் அந்நால்வரிடம் உறுதியளித்தனர். அதன்பின் 2023 நவம்பரில் இந்தியா சென்ற அவர்கள், அதற்கடுத்த மாதமே ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையிலிருந்து சுற்றுப் பயண விசாவில் அவர் ரஷ்யா சென்றதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிட்டுள்ளது.
துபாயில் மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலான சம்பளத்தில் அவர்கள் வேலைசெய்து வந்தனர். அவர்களுக்கு மாதம் ரூ.200,000 வரை சம்பளம் கிடைக்கும் என்று ஆட்சேர்ப்பு முகவர்கள் உறுதியளித்ததாகச் சொல்லப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து, அந்த இளையர்கள் நால்வரும் ஆளுக்கு ரூ.3.5 லட்சம் பணத்தை முகவர்களுக்குக் கொடுத்தனர் என்று அவர்களில் ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார்.
இந்நிலையில், அந்த இளையர்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ரஷ்ய அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் வேக்னர் படையில் அவர்களைக் கட்டாயப்படுத்திச் சேர்த்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களைப் போல மேலும் 60 இந்திய இளையர்களும் அந்தத் தனியார் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
மகாராஷ்டிராவில் யூடியூப் ஒளிவழி நடத்தும் ஒருவரே அவர்களைத் தவறாக வழிநடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
“பதினைந்து நாள்களுக்குமுன் என் சகோதரர் சுஃபியான் என்னிடம் பேசியபோது, உக்ரேன் எல்லையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறினார். தங்கள் விருப்பத்திற்கு எதிராகத் தங்களை அங்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் சொன்னார். அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்,” என்றார் 31 வயதான சையது சல்மான்.
எப்படியோ ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரிடமிருந்து கைப்பேசியை வாங்கி, தங்களைத் தொடர்புகொண்டார் என்றும் எப்படியாவது தங்களைக் காப்பாற்றும்படி அவர் கெஞ்சினார் என்றும் சல்மான் சொன்னார்.