மணிப்பூர் துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

1 mins read
b253e5e6-40f6-42c9-9801-2ab7717f6f8c
2023ஆம் ஆண்டு முதல் மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். - படம்: இந்திய ஊடகம்

இம்பால்: மணிப்பூரில் நான்கு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.

அந்த மோதல் வன்முறையாக உருவெடுத்ததில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இரண்டு இனக்குழுக்களையும் சேர்ந்த ஆயுதக்குழுவினரை மத்திய அரசு பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்துள்ளது.

மேலும், அந்த பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க பாதுகாப்புப் படையினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த மாநிலத்தின் கம்ஜொங் மாவட்டம் ஹனிப் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) அதிகாலை அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

எஞ்சிய பயங்கரவாதிகள் வனப்பகுதிக்குள் தப்பிச்சென்றுவிட்டனர். இதையடுத்து துப்பாக்கிச் சண்டை நடந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

அந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றினர்.

குறிப்புச் சொற்கள்