திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், குடும்பத்துடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த புதுமணத் தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர், காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் மீட்டனர். அவர்களது உடல்கள் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
காவல்துறையினரின் விசாரணையில், புதுமணத் தம்பதிகள் மலேசியாவுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. புதுமணத் தம்பதியரின் பெயர்கள் நிகில், அனு என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். நிகில் கனடாவில் வேலை பார்த்து வந்துள்ளார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
காரின் ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்குக் காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்தில் பயணம் செய்த சிலருக்கும் ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
குவைத்தில் இருக்கும் நிகிலின் சகோதரி வீடு திரும்பியதும் நால்வரின் இறுதிச் சடங்குகளும் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

