மைசூரு: கர்நாடக மாநிலத்தில் நீர்ப்பாசனக் கால்வாய் ஒன்றில் மூழ்கி நான்கு சிறுமியர் உயிரிழந்தனர்.
அந்தச் சம்பவம் ஸ்ரீரங்கப் பட்டணம் தாலுகாவில் உள்ள மாண்டியாடகொப்பலு என்னும் கிராமத்தில் சனிக்கிழமை (நவம்பர் 1) மாலை நிகழ்ந்தது.
மைசூரு நகரில் உள்ள சாந்திநகர் மதராசா பள்ளியைச் சேர்ந்த 15 பேர் வெளிப்புறச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக நீர்நிலைகளைச் சுற்றிப் பார்த்தனர். அப்போது, பாசனக் கால்வாய் ஒன்றில் ஆசிரியர் உள்ளிட்ட ஆறு பேர் திடீரென்று சிக்கிக்கொண்டனர்.
தண்ணீரில் தத்தளித்த அவர்கள் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் மக்கள் ஆசிரியரையும் ஒரு மாணவியையும் மீட்டுக் கரையேற்றினர்.
எஞ்சிய நால்வரும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டனர். அவர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இன்னும் இரு மாணவிகளைத் தேடும் பணி சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றன.
தீயணைப்பு மற்றும் அவசரகாலப் பணியாளர்கள், உள்ளூர் மக்கள், மைசூரு இளையர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு இரு மாணவிகளையும் மீட்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவிகளின் பெயர்களைக் காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்கள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

