ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தி, தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி, மரைக்காயர்பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, கீழக்கரை, நரிப்பையூர் உள்ளிட்ட தெற்கு கடற்கரை கிராமங்களில் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஹவாலா பணம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் ஒரு வாரமாக கீழக்கரை, ஏர்வாடி, திருப்புல்லாணி, பொக்கரனேந்தல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
சோதனையின்போது சரக்கு வாகனங்கள், உயர்ரக சொகுசு கார்களில் பயணிப்பவர்களின் விவரங்கள், அவர்களின் கைப்பேசி எண்களைச் சேகரித்து வந்தனர்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்றதைப் பார்த்த சுங்கத்துறையினர் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தாங்கள் கொண்டு சென்ற பொட்டலங்களைக் கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றனர்.
அதிகாரிகள் பொட்டலங்களைச் சோதனையிட்டபோது அதில் உயர் ரக கஞ்சா 40 கிலோ இருந்தது. தப்பிச் சென்றவர்களைக் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.