மத்திய கிழக்கு நிலவரம் குறித்து மோடி-டிரம்ப் விரிவான பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை

மத்திய கிழக்கு நிலவரம் குறித்து மோடி-டிரம்ப் விரிவான பேச்சுவார்த்தை

2 mins read
9e266536-c4c2-42f0-9563-fe8029e55a3d
மத்திய கிழக்கு நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த டிரம்ப், மோடி பேச்சுவார்த்தை ஏறக்குறைய 40 நிமிடங்கள் நீடித்தது. - படம்: என்டிடிவி

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் பேசினர். செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) நடைபெற்ற உரையாடலின்போது பல்வேறு துறைகளில் இரு தரப்பும் ஒத்துழைப்பது குறித்தும் மத்திய கிழக்குப் பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்ததாகத் தெரிகிறது.

ஏறக்குறைய 40 நிமிடங்கள் இந்த உரையாடல் நீடித்தது என்றும் அப்போது ​​ஹோர்முஸ் நீரிணையைத் திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவர்களும் வலியுறுத்தியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்​தம் செய்ய பாகிஸ்​தான் மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து ஹோர்​முஸ் நீரிணையை முடக்​கு​வ​தாக அதிபர் டிரம்ப் அறி​வித்துள்ளார். இதனால் மத்திய கிழக்குப் பகுதிகளை மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இத்தகைய சூழலில் அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது இருதரப்பும் அனைத்துத் துறைகளிலும் உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன என்று பிரதமர் மோடி தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“எனது நண்பர் அதிபர் டிரம்ப்பிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் இருதரப்பும் நல்கி வரும் ஒத்துழைப்பு காரணமாக எட்டப்பட்ட கணிசமான முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்தோம்,” என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துத் துறைகளிலும் விரிவான உலகளாவிய உத்திபூர்வ பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த இருதரப்பும் உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மத்திய கிழக்கில் தற்போதுள்ள நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இதனிடையே இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியதை உறுதி செய்துள்ள இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர், அமெரிக்கா, ஈரான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்​தி​யா மேற்கொண்டுள்ள ​சமரச முயற்​சி​யை​ அமெரிக்கா முழு​மனத்துடன் வரவேற்​பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு தலைவர்களின் அந்த உரையாடல் மிக நேர்மறையானதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில், பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்ப்பிற்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல், ஈரான் நாடுகளின் தலை​வர்​களு​டன் திரு மோடி நல்ல நட்புறவில் இருந்து வருகிறார்.

இஸ்​லா​மா​பாத் ஏற்பாட்டில் நடைபெற்ற பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்த பிறகு ரஷ்​யா, துருக்​கி, ஜெர்​மனி, பிரான்​ஸ், பிரிட்​டன் உள்​ளிட்ட நாடு​களின் தலை​வர்​கள் மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக பல்வேறு சமரச முயற்​சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சூழலில் இந்​தியப் பிரதமருடன் அதிபர் டிரம்ப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்